Tuesday, 1 March 2011

விறுவிறுப்பான இந்தியா, இங்கிலாந்து போட்டி 'டை'யில் முடிந்தது!



பெங்களூர்:





படு விறுவிறுப்பாக நடந்த இந்தியா, இங்கிலாந்து இடையிலான உலகக் கோப்பை போட்டி யாரும் எதிர்பாராத வகையில் டையில் முடிந்து இரு நாட்டு ரசிகர்களையும் அதிர வைத்து விட்டது.நடப்பு உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக பரபரப்பாக நடந்தது நேற்றைய இந்தியா, இங்கிலாந்து போட்டி. முதலில் பேட் செய்த இந்திய அணி, அபாரமாக ஆடி 338 ரன்களைக் குவித்தது. இதில் சச்சின் டெண்டுல்கர் விளாசிய அபாரமான 120 ரன்களும் அடக்கம்.உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இது ஒரு சாதனை சதமாகும். கூடவே கம்பீர், ஷேவாக், யுவராஜ் சிங், டோணி ஆகியோரும் ரன்களைக் குவித்தனர்.இதையடுத்து விளையாட வந்த இங்கிலாந்து, இந்தியாவின் ரன் குவிப்புக்கு சற்றும் சளைக்காமல் வெளுத்துக் கட்டியது. குறிப்பாக இந்திய பந்து வீச்சை நொறுக்கித் தள்ளி ரன்களைக் குவித்தார் கேப்டன் ஆண்ட்ரூ் ஸ்டிராஸ். அபாரமாக ஆடிய அவர் 145 பந்துகளில் 158 ரன்களைக் குவித்து இங்கிலாந்தை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றார்.அவருக்குத் துணையாக இயான் பெல் 69 ரன்களைக் குவித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. யார்டியும், ஸ்வானும் இணைந்து அதிரடியாக ஆடி வந்ததால் இங்கிலாந்து வெற்றி பெற்று விடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இங்கிலாந்தும் அந்த நம்பிக்கையுடன்தான் இருந்தது.இந்த நேரத்தில் யார்டியை வீழ்த்தினார் முனாப் படேல். இதையடுத்து வெற்றிக்கான பொறுப்பு ஸ்வான் மற்றும் சஷாத்திடம் வந்தது. இருவரும் அதை நேர்த்தியாக எதிர்கொண்டனர்.கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தபோது மைதானமே பரபரப்பாகிப் போனது. இங்கிலாந்து ஒரு ரன் எடுத்தால் டை, 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையால், இந்திய ரசிகர்கள் பரபரப்படைந்தனர்.இந்த நிலையில் படேல் வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்வான் அதை ஓங்கி அடித்து வேகமாக ஓடி ஒரு ரன்னை எடுத்து ஆட்டத்தை டையில் முடித்தார்.பெரும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முடிவால் இரு அணிகளும் ஏமாற்றமடைந்தாலும், ஒரு புள்ளியாவது கிடைத்ததே என்ற திருப்தியடைந்தனர்.4வது போட்டி:உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றில் ஒரு போட்டி டையில் முடிவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா (213), தென் ஆப்பிரிக்கா-இலங்கை (268), அயர்லாந்து-ஜிம்பாப்வே (221) ஆகிய போட்டிகள் டையில் முடிந்துள்ளன. பெரிய ஸ்கோரை எடுத்த ஒரு அணியை, எதிர் அணி டை செய்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நாள் போட்டி வரலாற்றில் டையில் முடிந்த 24வது போட்டியாகும் இது. இந்தியா விளையாடிய போட்டிகளில், டையில் முடிந்த 4வது போட்டியாகும் இது.அபாரமாக ஆடி இங்கிலாந்து அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றிய அந்த அணியின் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.


தொடர்ந்து முதலிடம்:





தற்போது இந்தியா பி பிரிவில் 3 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்தும் 3 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் உள்ளது.


Thanks for Thatstamil

No comments:

Post a Comment