Wednesday 9 March 2011

அதிமுக-சிபிஐ தொகுதி பங்கீட்டில் சிக்கல்: ஜெ-தா.பாண்டியன் சந்திப்பு திடீர் ஒத்திவைப்பு



சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது.





இந்தக் கூட்டணியில் உள்ள மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்யவி்ல்லை. இவர்களை விட மிக லேட்டாக கூட்டணிக்கு வந்த விஜய்காந்தின் தேமுதிகவுக்கு 41 இடங்களை உடனடியாக ஒதுக்கி இந்த மூன்று கட்சிகளுக்கும் முதல் அதிர்ச்சியைத் தந்தார்.





இதையடுத்து நடந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் இந்தக் கட்சிகளுக்கான இடங்களை பெறுமளவில் குறைத்து இரண்டாவது அதிர்ச்சியைத் தந்தது அதிமுக.





இந் நிலையில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் மூண்டு, அந்தக் கூட்டணி உடைந்து காங்கிரஸ் வெளியேறினால் அவர்களை கூட்டணியில் சேர்க்கலாம் என்று திட்டமிட்டு மதிமுக, இடதுசாரிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையையே தாற்காலிகமாக நிறுத்தி வைத்து மூன்றாவது அதிர்ச்சியைத் தந்தார் ஜெயலலிதா.இடையில் திமுக-காங்கிரஸ் இடையே தாற்காலிக சமரசம் ஏற்பட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அதிமுக. இதனால் மதி்முக, இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு அதிர்ச்சி தொடர்ந்தது.இந் நிலையில் திமுக-காங்கிரஸ் இடையே சிக்கல் தீர்ந்துவிட மதிமுக, இடதுசாரிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.ஆனாலும், விஜய்காந்த் கூட்டணிக்குள் வந்துவிட்டதால் இந்தக் கட்சிகளுக்கு அதிமுக தருவதாகக் கூறும் இடங்கள் மிகக் மிகக் குறைந்துவிட்டது.குறிப்பாக மதிமுகவுக்கு கடந்த தேர்தலில் தரப்பட்ட 35 இடங்கள் இந்த முறை நிச்சயம் கிடைக்காது என்று கூறப்பட்டுவிட்டது.மதிமுகவுக்கு 18ம், மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சிக்கு 13, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் தரப்படும் என அதிமுக கூறியுள்ளது.இது இந்த மூன்று கட்சிகளையுமே கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இதனால் இவர்களுடன் தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்படுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.இந் நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று மாலை இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் மிகக் குறைவான தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்திருப்பதால் தா.பாண்டியன் ஜெயலலிதாவை சந்திக்கச் செல்லவில்லை. இந்த சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.குற்றவாளிக் கூண்டில் திமுக-காங்கிரஸ்...தா.பாண்டியன்:முன்னதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று காலை சென்னையில் நடந்தது. கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், துணைச் செயலாளர்கள் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தா.பாண்டியன், 2009ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைந்துள்ள மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் பங்கு வகிக்கிறார்கள். இந்தக் கட்சிகள் கடைப்பிடிக்கின்ற தவறான பொருளாதாரக் கொள்கைகளால், நம்முடைய வாழ்க்கையில் இதுவரை கண்டிராத விலைவாசி ஏற்றக் கொடுமையை கொஞ்ச நாட்கள் அல்ல, ஒரு வருட காலம் முழுமையாக சந்திக்க நேரிட்டது.இந்த ஆட்சி 6 முறை டீசல், பெட்ரோல் விலைகளை உயர்த்தி இருக்கிறது. மேலும் உயர்த்துவதற்காக திட்டமிட்டு, எண்ணெய் துறையினருக்கே அந்த அனுமதியும் வழங்கியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அது கடைப்பிடித்து வரும் கொள்கைகளில் ஊழல் மலிந்து நிர்வாகச் சீர்கேடுகள் ஏற்பட்டதற்கு நானே பொறுப்பு என்று ஒப்புக்கொள்கின்ற அளவிற்கும், ஆனால் ஏன் நடந்தது என்று தான் தெரியவில்லை,யார் செய்தார் என்றும் தெரியவில்லை என்று பதில் கூறக் கூடிய ஒரு அவலநிலை ஒரு பிரதமருக்கு ஏற்பட்டுள்ளதையும் இந்த நாடு அண்மையில் தான் கண்டது.அதில் முக்கிய பங்கு வகித்த திமுகதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப்பெரும் ஊழல் செய்திருக்கிறது என்பதை ஏதோ சிலர் இட்டுக்கட்டிச் சொல்வதாக அல்லது ஆளுகிற கட்சி மீது உள்ள பொறாமை காரணமாகச் சொல்லுவதாக முதலமைச்சரும் சொன்னார், பொதுக் குழுவைக் கூட்டி அத்தகைய தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.ஆனால் அவர்களும் அங்கம் வகிக்கும் மத்திய அரசினுடைய தலைமை தணிக்கை அதிகாரியே புள்ளி விபரங்களோடு ஏற்பட்டு இருக்கிற இழப்புக் கணக்கையும் காட்டினார். அதேபோல் மத்தியப் புலனாய்வுத் துறை இன்றைக்கு இதுவரை நாங்கள் யாரும் கண்டிராத ஒலிப்பதிவு நாடாக்களை எல்லாம் வெளியிட்டு, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்கள்.நீரா ராடியா பேசியது, அவர் உரையாடியது, அதுவும் பெரும் பகாசுரப் பேர்வழிகளுடனும், அரசியல்வாதிகளுடனும் பேசியதில் இந்த நாட்டின் நாடாளுமன்ற நடைமுறையே கேலிக்கூத்தாக்கப்பட்டது, விலை பேசப்பட்டது என்பது தெளிவாகியுள்ளது. இத்தனை அநியாயங்களைச் செய்த காங்கிரஸ் கட்சியும், திமுகவும் கடைசியில் கூட்டுக் கொள்ளை அடித்தது மட்டும் அல்ல, கூட்டணி சேர்ப்பதிலும் அவர்கள் மோதிக் கொண்டதில் இந்த தேர்தல் தொடக்க வேலையைக் கூட குழப்பத்திற்கு ஆளாக்கப் பார்த்தார்.அதிலும் திமுக, அமைச்சரவையை விட்டு வெளியேறுவதாகவும், தொகுதி உடன்பாட்டிற்கு அவர்கள் கேட்கிற தொகுதிகளைத் தர இயலாத அநியாயக் கோரிக்கை என்றெல்லாம் தடபுடலாகப் பேசிவிட்டு ஒரே நாளில் இரண்டு பேருமே மீண்டும் கூட்டு சேர்ந்ததாக அறிவித்துள்ளனர். இது அவர்கள் கட்சிகளுக்கு உள்ள சுதந்திரம். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்தே பதில் சொல்லவேண்டிய குற்றவாளிக் கூண்டிலேதான் இந்த சட்டமன்றத் தேர்தலில் நிற்கிறார்கள்.எனவே அந்தக் கட்சிகளை தோற்கடித்து, மாற்றாட்சி காணவேண்டும் என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவை நிறைவேற்றுவதற்காக நாங்கள் அமைக்கக்கூடிய, மக்களைத் திரட்டக்கூடிய அணியைப் பொறுத்தவரையில் நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். அந்த அணியும் அமைந்தும் இருக்கிறது. இந்த அணி தொடர்ந்து நீடிக்கும். இந்த அணி வெற்றிபெறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

Thanks for thatstamil

No comments:

Post a Comment