சென்னை: நாடார் சங்கங்களை எல்லாம் ஒரே அணிக்குக் கொண்டு வந்ததன் மூலம் புதிய பலம் பெற்றுள்ள சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுகவுடன் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது.
சரத்குமாரின் கட்சிக்கு அதிமுகவில் 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சரத்குமார் சந்தித்துப் பேசியபோது இந்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த 2 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தற்போது சமத்துவ மக்கள் கட்சியும், அதிமுக கூட்டணியில் இடம்பெறுகிறது. இந்தக் கட்சியின் கீழ், அனைத்து நாடார் சங்கங்களும் ஒருங்கிணைந்துள்ளன. இதற்காக அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் சமத்துவ மக்கள் கட்சி தொகுதி பங்கீட்டு குழுவினர் நடத்தினர்.அப்போது தங்களுக்கு 7 தொகுதிகள் வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி கோரியது. ஆனால், 2 தொகுதிகளை மட்டும் அதிமுக ஒதுக்கியுள்ளது.முன்னதாக சரத்குமார் நேற்று கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மாநில நிர்வாகிகள் அனைவரும் 4 அல்லது 5 தொகுதிகளை பெற்றுக் கொண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதன் அடிப்படையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இன்று மாலை போயஸ் கார்டனில் சந்தித்தார் சரத்குமார். அப்போது 2 தொகுதிகள் என்று முடிவானது. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அரசியலில் புகுந்தவர் சரத்குமார். உண்மையில் அவரது நாட்டாமைப் படம்தான் அவரது அரசியல் பிரவேசத்திற்குக் காரணம் எனலாம். அந்தப் படத்தை அப்போது ஜெயா டிவி தடாலடியாக ஒளிபரப்ப கோபமடைந்த சரத்குமார் திமுகவில் இணைந்தார்.அதன் பின்னர் திமுகவில் ராஜ்யசபா எம்.பியாக்கப்பட்டார். இருப்பினும் அதற்கு மேல் அவருக்கு கட்சியில் முன்னேற்றம் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியை விட்டு விலகினார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதாவை தேடிப் போய் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.பின்னர் அதே வேகத்தில் கட்சியை விட்டும் விலகி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார். இப்போது அதிமுக கூட்டணியில் இணைந்து 2 தொகுதிகளைப் பெற்றுள்ளார்.
இதன்மூலம் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக இதுவரை 51 தொகுதிகளை ஒதுக்கிவிட்டது. தேமுதிக 41, மனிதநேய மக்கள் கட்சி 3, சமத்துவ மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2, சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1, பார்வர்டு பிளாக் 1, இந்திய குடியரசுக் கட்சி 1 என கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன.
ஆனால், இவர்களுக்கு முன்பிருந்தே அதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
Thanks for thatstamil
No comments:
Post a Comment